Saturday 3 February 2018

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர்: தங்கப் பதக்கம் வென்றார் மேரி கோம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தத் தொடரில் கடைசி நாளான நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவை எதிர்த்து விளையாடினார். இதில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 64 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவிலோவோ பாசுமட்டரி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுடபோன் சீசன்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் சகநாட்டைச் சேர்ந்த வீராங்கனையான பூஜாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் அவர், பின்லாந்தின் மிரா போட்கெனனிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆடவர் பிரிவில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சஞ்ஜார் துர்ஸ்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் கடைசி நேரத்தில் விலகினார். அரை இறுதி ஆட்டத்தின் போது தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மங்கோலிய வீரர் மிஷெல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சதீஷ் குமார் 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலொலோவிடம் தோல்வியடைந்தார். இதேபோல் வெல்டர்வெயிட் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தினேஷ் தாகர் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் உஸ்மான் பட்ரோவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
81 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவன்ஸூ ஜெய்ஸ்வால் 1-4 என்ற கணக்கில் கியூபாவின் டேவிட் குட்டியர்ஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோல் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவீட்டி போரா கேமரூன் வீராங்கனை எஸைன் கோல்டிட்டிடம் தோல்வியடைந்தார்.

No comments:

Post a Comment