Friday 16 February 2018

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய என்ன வழி?

                                                                       சோம்பேறி..!
   சந்தனபுரம் என்னும் ஊரில் முருகன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் படு சோம்பேறி. அவர் தன் மகனை திருத்த வேண்டும் என்பதற்காக தினம் தினம் எவ்வளவோ முயற்சி செய்தும், அவருடைய மகனைக் கொஞ்சம்கூடத் திருத்த முடியவில்லை. அதனால் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது அவனுக்குத் தனியாக ஒரு செக்கும் இரண்டு மாடுகளும் வாங்கிக் கொடுத்து, எண்ணெய் தயாரித்துப் பிழைத்துக் கொள் என்று கூறினார்.

அவருடைய சோம்பேறி மகன், அப்பொழுதும் திருந்தவில்லை. மாடுகளை செக்கில் பூட்டினான். பூட்டியவுடன், அவற்றின் கொம்புகளில் சலங்கையைக் கட்டி வைத்தான். மாடுகள் செக்கை சுற்றி வரும்போது அந்த சலங்கை சத்தம் கேட்கும். மாடுகள் சுற்றுவது நின்றுவிட்டால் சலங்கை சத்தமும் நின்றுவிடும். அப்போது மட்டும் கவனித்து மாடுகளை ஓட்டினால் போதும். அதுவரை நிம்மதியாக ஓரிடத்தில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி, அவ்வாறே செய்து முடித்தான். பிறகு அங்கேயே படுத்து தூங்கினான்.

இப்படியே சில நாட்கள் சென்றன. ஒரு நாள், திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவன் செக்கை கவனித்தான். செக்கில் எண்ணெய் ஆட்டப்படாமல் அப்படியே இருந்தது. செக்கில் போட்ட எள்ளும் அப்படியே இருந்தது. அருகில் சென்று பார்த்தான். உடனே மாடுகள் நகர தொடங்கின.

செக்கில் போட்ட எள் அப்படியே இருக்கிறது. ஆனால் சலங்கை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததே எப்படி? அப்படியானால் மாடுகள் ஓடிக்கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எப்படி செக்கில் எண்ணெய் ஆட்டப்படாமலேயே இருக்கிறது என்று யோசித்தான். எப்போதும் செக்கில் எள்ளைப் போட்டு விட்டு தூங்கச் செல்பவன் வழக்கத்திற்கு மாறாக தூங்கச் செல்லாமல் ஓரிடத்தில் மறைவாக நின்று கொண்டு செக்கையும், மாடுகளையும் கவனித்தான்.

சலங்கை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் மாடுகள் நகரவே இல்லை. தங்களின் தலையை மட்டும் ஆட்டி சலங்கையை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தன. சோம்பேறியிடம் பழகிய மாடுகளான அவைகளும் அவனைப் போலவே மாறிப் போயிருந்தன. அப்போதுதான் அவருடைய சோம்பேறி மகனுக்கு சோம்பேறித்தனமாக வாழக்கூடாது என்று புத்தி வந்தது. மனம் திருந்திய அவன் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். அவனுடைய அப்பாவும் தன் மகன் திருந்தியதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நீதி :

சோம்பேறித் தனத்தினால் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியாது.

No comments:

Post a Comment