Sunday 21 January 2018

அதிகமாக ஆணவம் கொண்டால் கடைசியில் இப்படித்தான்!

அதிகமாக ஆணவம் கொண்டால் கடைசியில் இப்படித்தான்!
எங்கே வெளிச்சம்?

ஒரு ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அந்த அறிஞர் பல நூல்களை கற்றறிந்தவர். அந்த அறிஞர் பல்வேறு நூல்களைக் கற்றறிந்தவர் என்பதால் பல இடங்களிலிருந்தும் பெரும்பாலான மக்கள் அவரை வந்து சந்தித்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் அந்த அறிஞருக்கு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கர்வத்தைத் தனக்குள்ளாகவே வளர்த்து வந்தார்.

திடீரென அந்த அறிஞர் வெளியூருக்கு சென்றார். அந்த ஊரில் உள்ள மக்களுக்கு இந்த அறிஞரைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் அந்த ஊர் மக்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. அதிகம் படித்தவர்களிடம் ஏதேனும் ஒரு குறை நிச்சயம் இருக்கும். பொதுவாகவே அதிகம் கற்றறிந்தவர்கள் எப்போதுமே தனக்குத் தெரிந்ததை யாரிடமாவது சொல்லி பெருமைப் பேசிக் கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.

இந்த அறிஞர் மட்டும் விதிவிலக்கல்ல. இந்த ஊரில் இருக்கும் மக்களில் ஒருவர் கூட தன்னை வந்து பார்க்காதபோது, நான் என்னுடைய அறிவை யாரிடம் வெளிப்படுத்துவது என்று அறிஞர் மிகவும் கவலைக் கொண்டிருக்கையில், திடீரென அருகில் இருக்கும் ஒரு அறைக்கு ஒரு சிறுமி வந்து ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.

அந்த சிறுமியைப் பார்த்த அறிஞர், அந்த சிறுமியிடமாவது தனது திறமையைக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் அந்த சிறுமியை அழைத்து, பாப்பா, நீ வந்து மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன்பாக இந்த அறை இருட்டாக இருந்தது. நீ இங்கு வந்து மெழுகுவர்த்தி ஏற்றிய உடனே வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்.

உடனே அந்த சிறுமி தான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்து விட்டு, அந்த அறிஞரைப் பார்த்து சிறிது நேரத்திற்கு முன் வெளிச்சம் இருந்தது. ஆனால் நான் மெழுகுவர்த்தியை அணைத்ததும் அந்த வெளிச்சம் எங்கே போனது? என்று கேட்டாள். அந்த சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் அந்த அறிஞர் தடுமாறிப் போனார்.

அப்போதுதான் தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற அவருடைய கர்வம் அழிந்தது. அதுமட்டுமல்லாமல் தனக்கு எல்லாமே தெரியாது என்ற உண்மையையும் அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார். அன்று முதல் இவ்வுலகில் அனைத்தையும் அறிந்தவர்கள் ஒருவரும் கிடையாது என்பதையும், அறிந்து கொள்ள வேண்டியதற்கு அளவுகள் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டுவிட்டு வாழ ஆரம்பித்தார்.

தத்துவம் :
தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று நினைத்து வாழ்வது தவறு.

Saturday 6 January 2018

விடைபெறும் 2017ல் நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் சில நினைவுகள் !

விடைபெறும் 2017ல் நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் சில நினைவுகள் !
2017ல் நடந்த சுவாரஸ்யமான சில நிகழ்வுகள் !!
2017ல் நாம் கற்றுக்கொண்ட, இன்னும் சொல்லப்போனால் நாம் மறந்து போன விஷயங்கள் மற்றும் இந்த வருடத்தின் மறக்க முடியாத சம்பவங்களை கொஞ்சம் பார்க்கலாம் வாங்க....

ஜி.எஸ்.டி :

🌟 நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை சீர்செய்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறை அமல்படுத்தப்பட்டது. பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி  இதனைத் தமிழில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்கிறோம். இதனை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்கள். இந்த திட்டம் ஜூலை 01 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

பாகுபலி-2 :

🌟 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பகுதி 2017ல் வெளியானது. இந்தியாவில் மிகவும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் வேட்டையை நடத்தியது.

பிக்பாஸ் :

🌟 பெரும் எதிர்பார்ப்புகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஜூன் மாத இறுதியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

டீளு ஐஐஐ :

🌟 பி.எஸ் என்றால் பாரத் ஸ்டேஜ் எமிசன் ஸ்டாண்ட்ரட்ஸ். இதனை இந்திய அரசாங்கம் உருவாக்கியது. இதன் முக்கிய வேலையே மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையை கண்காணிப்பது தான்.

🌟 இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அதீத நச்சுக்காற்றை வெளியிட்டு காற்றினை மாசுப்படுத்தும் டீளு ஐஐஐ வகை வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டன.

ஒக்கி புயல் :

🌟 ஒக்கி புயல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒக்கி புயலால் ஏற்பட்ட கடும் மழை, சூறைக் காற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

ரன்சம்வேர் :

🌟 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கிய இணைய வழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணினிகளில் ரன்சம்வேர் வைரஸ் தாக்கியது. இ-மெயில் மூலமாக நடந்த இந்த சைபர் தாக்குதலினால் கணினிகள் முடங்கியது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ப்ளு வேல் :

🌟 ரஷ்ய நாட்டு இளைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது 'ப்ளு வேல்" என்னும் விளையாட்டு. உலகமெங்கும் பல உயிரைப்பறித்த 'ப்ளு வேல்" ஆன்லைன் கேம், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது 2017ல்.