Sunday 21 January 2018

அதிகமாக ஆணவம் கொண்டால் கடைசியில் இப்படித்தான்!

அதிகமாக ஆணவம் கொண்டால் கடைசியில் இப்படித்தான்!
எங்கே வெளிச்சம்?

ஒரு ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அந்த அறிஞர் பல நூல்களை கற்றறிந்தவர். அந்த அறிஞர் பல்வேறு நூல்களைக் கற்றறிந்தவர் என்பதால் பல இடங்களிலிருந்தும் பெரும்பாலான மக்கள் அவரை வந்து சந்தித்து, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் அந்த அறிஞருக்கு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கர்வத்தைத் தனக்குள்ளாகவே வளர்த்து வந்தார்.

திடீரென அந்த அறிஞர் வெளியூருக்கு சென்றார். அந்த ஊரில் உள்ள மக்களுக்கு இந்த அறிஞரைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் அந்த ஊர் மக்கள் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. அதிகம் படித்தவர்களிடம் ஏதேனும் ஒரு குறை நிச்சயம் இருக்கும். பொதுவாகவே அதிகம் கற்றறிந்தவர்கள் எப்போதுமே தனக்குத் தெரிந்ததை யாரிடமாவது சொல்லி பெருமைப் பேசிக் கொள்ள வேண்டும் என்று விரும்புவர்.

இந்த அறிஞர் மட்டும் விதிவிலக்கல்ல. இந்த ஊரில் இருக்கும் மக்களில் ஒருவர் கூட தன்னை வந்து பார்க்காதபோது, நான் என்னுடைய அறிவை யாரிடம் வெளிப்படுத்துவது என்று அறிஞர் மிகவும் கவலைக் கொண்டிருக்கையில், திடீரென அருகில் இருக்கும் ஒரு அறைக்கு ஒரு சிறுமி வந்து ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.

அந்த சிறுமியைப் பார்த்த அறிஞர், அந்த சிறுமியிடமாவது தனது திறமையைக் காட்ட வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் அந்த சிறுமியை அழைத்து, பாப்பா, நீ வந்து மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன்பாக இந்த அறை இருட்டாக இருந்தது. நீ இங்கு வந்து மெழுகுவர்த்தி ஏற்றிய உடனே வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார்.

உடனே அந்த சிறுமி தான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்து விட்டு, அந்த அறிஞரைப் பார்த்து சிறிது நேரத்திற்கு முன் வெளிச்சம் இருந்தது. ஆனால் நான் மெழுகுவர்த்தியை அணைத்ததும் அந்த வெளிச்சம் எங்கே போனது? என்று கேட்டாள். அந்த சிறுமி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் அந்த அறிஞர் தடுமாறிப் போனார்.

அப்போதுதான் தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற அவருடைய கர்வம் அழிந்தது. அதுமட்டுமல்லாமல் தனக்கு எல்லாமே தெரியாது என்ற உண்மையையும் அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார். அன்று முதல் இவ்வுலகில் அனைத்தையும் அறிந்தவர்கள் ஒருவரும் கிடையாது என்பதையும், அறிந்து கொள்ள வேண்டியதற்கு அளவுகள் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டுவிட்டு வாழ ஆரம்பித்தார்.

தத்துவம் :
தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று நினைத்து வாழ்வது தவறு.

No comments:

Post a Comment